மதுரையில் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா ஆற்றிய அருளுரை. By வடவள்ளி ரவிசந்திரன்
இந்த பதிவு அய்யனின் உரையை ஒலிப்பதிவை கேட்டு உள்வாங்கி வரிசைக்கிரமமாக இதை தட்டச்சு செய்து இதை பதிவு செய்தவர்
நண்பர் வடவள்ளி ரவிசந்திரன் அவரின் முயற்சியை நகல் எடுத்து என் blog ல் ஏற்றியது மட்டுமே என் பணி.
யோகிராம்சுரத்குமார்யோகிராம்சுரத்குமார்
யோகிராம்சுரத்குமார்
ஜெயகுருராயா.
மதுரையில்
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா ஆற்றிய அருளுரை.
யோகிராம் சுரத்குமாரம்
யோகிராம் சுரத்குமாரம்
தேவ ஜாதி மனித ரூபம்
யோகிராம் சுரத்குமாரம்.
திருவண்ணாமலை மஹான், கடவுளின் குழந்தை, அடியார்க்கு நல்லான் எங்கள் சத்குருநாதன் யோகிராம் சுரத்குமார் அவர்கள் பாதங்களில் என் சிரம் பதிய வைத்து அறிவார்ந்த இந்த மதுரை சபையின் முன்பு, இந்த சங்கத்தமிழ்ச் சபையின் முன்பு என் சிறிய உரையைத் துவக்குகின்றேன்.
இந்தக் கூட்டம் போதாது. உங்களுக்கு யோகம் என்கிற விஷயம் பற்றி சரியாகத் தெரியவில்லை. இதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்தான் வர முடியும். கடினம்தான். இது ஈசியான வழி இல்லை.
நல்லா மாமிச உணவு சாப்பிட்டுவிட்டு கொஞ்சமா போதையோட ஒரு சினிமா பார்க்கிற சந்தோஷம் இங்க இருக்காது. இது கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதை. விட்டு வழுக்கினால் மண்டை பிளந்துவிடும்.
யோகம் என்கிற விஷயம் ஒழுக்கம் என்கிற விஷயத்தோடு சம்பந்தப்பட்டது. ஒழுக்கமாக இருப்பது என்பது சுய கட்டுப்பாடு. சுய கட்டுப்பாடு என்பது தன்னை அறிவது. தன்னை அறிவது என்பது ஒரு அமைதியான சூழ்நிலையில்தான் ஏற்படும்.
எந்த நேரமும் கூச்சலோடு இருந்தால் எப்படி தன்னை அறிய முடியும்? எப்படி சுய கட்டுப்பாடு வரும்?
சிறுவயதில் உங்களைப் போலவே மிகச் சாதாரணமாக இருந்த பாலகுமாரன் இன்று நீங்களெல்லாம் எழுத்துச் சித்தர் என்று கூப்பிடுகிற அளவிற்கு வளர்ந்திருக்கிறேன். எப்படி வளர்ந்தேன். யோகத்தால், தியானத்தால்.
16 வயதில் ஒரு கௌடியா மடத்து பிரம்மச்சாரி சொல்லிக் கொடுத்தார். Inhale Exhale எப்படி பந்தனம் பண்ணனும், எப்ப பந்தனம் பண்ணனும், எவ்வளவு பந்தனம் பண்ணனும்னு சொல்லிக்கொடுத்தார்.
எனக்குப் பிடித்த MGR பாடல் ஒன்று உண்டு. மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும், ஒரு மாற்றுக் குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழவேண்டும். உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்.
அற்புதமான வரி. எல்லாம் ஜெயிச்சுடலாம் என்று சொல்லவில்லை. உலகத்தில் போராடலாம். இந்த உலகத்தில் போராட்டம் நிச்சயம். நீ போராடித்தான் ஆகவேண்டும். ஆனால் போராடுவதற்குண்டான தெம்பும் திறனும் உனக்கு வரும் உன்னை அறிந்தால்.
உன்னை அறிந்தால் என்ற அந்தப் பாட்டு என் நெஞ்சுக்குள் ஆழமாகப் பதிந்தது. வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் சூரிய நமஸ்காரம் கற்றுக்கொண்டேன்.
தினசரி, அந்தணர் குலத்தில் பிறந்ததால் அக்னி கோத்திரம் என்கிற ஒரு தீ மூட்டி அரசங்குச்சிகளைப் போட்டு மந்திரம் சொல்லி அக்னியை வழிபடும் முறையை கற்றுக்கொண்டேன்.
கண்மூடி உள்ளுக்குள்ளே ஜபிக்கக் கற்றுக்கொண்டேன். கண்திறந்து முணுமுணுப்பாய் ஜபிக்கக் கற்றுக்கொண்டேன். எப்பொழுதெல்லாம் நேரம் கிடைத்ததோ அப்பொழுதெல்லாம் வெறி பிடித்தது போல செய்தேன்.
இதை என் குருநாதர் யோகிராம் சுரத்குமாரிடம் சொன்ன போது Balakumar lots
of people learning yoga and manthra and thiyana. But only few people succeeds.
You have succeeded. நீ ஜெயித்திருக்கிறாய் உனக்கு முடிந்திருக்கிறது. ஏன் அது. It is decided
long before.
இது முன்னமே தீர்மானிக்கப்பட்ட விஷயம். இது எப்பொழுதோ நடந்த காரியம். உங்களுக்கு யோகம் வரவேண்டும் என்றால், இந்தக் கூட்டத்தில் உட்கார வேண்டும் என்றால் இது எப்பொழுதோ நடந்த காரியம். தலையெழுத்து இருந்தால் ஒழிய இந்தக் கூட்டத்தில் உட்கார முடியாது.
70 வயதில் நான் தள்ளாட்டமாக இருக்கிறேன். ஒரு நாளைக்கு 120 சிகரெட் குடித்தவன். சிகரெட் குடித்தால்தான் எழுத முடியும் என்று நினைத்தவன். ஆனால் அந்த 120 சிகரெட்டிலிருந்து ஒரே நாளில் வெளியே வந்தேன் தியானத்தால்.
COPD. Chronic obstructive pulmonary disease. நுரையீரல் 10 பர்ஸண்ட் மட்டுமே வேலை செய்யும். 10 பர்ஸண்ட் சுவாசமும் மரணமும் ஒன்றே. மதுரைக்கு வரவேண்டும் என்றால்கூட நெபுலைசர் வைத்துக்கொண்டு வரவேண்டும். அப்படிப்பட்ட நிலையிலிருந்து மீண்டு வந்ததற்கு காரணம் தியானம்.
என்ன முடிஞ்சு போச்சா? போலாமா. இராமாயணம் மகாபாரதம் எழுத வேண்டாமா? ஆரம்பிச்சுட்டேனே. முடிக்க வேண்டாமா? என்ன செய்யலாம். சத்குரு யோகிராம் சுரத்குமார் சொல்லுங்கள் நான் கிளம்பத் தயாராக இருக்கிறேன்.
இரு. இரு. நண்பர்களே இந்தக் கேள்வி 12.05 க்கு. இரு என்று சொன்னது 12.10 க்கு. 12.15 க்கு நான் ஆக்சிஜன் மாஸ்க்கை தூக்கி கழட்டி கீழே போட்டுவிட்டு முக மலர்ச்சியோடு உட்கார்ந்திருந்தேன்.
சிஸ்டர் கத்துறாங்க.என் wife பதறுகிறாங்க. இனிமே எனக்கு ஒன்னும் இல்லை. சரியாடுச்சு. இந்தப் பிடிப்பு, இந்தத் தெளிவு, இந்த அமைதி எனக்கு தியானம் கற்றுக் கொடுத்தது. தியானத்தின் ஆரம்பம் யோகா.
உள்ளே ஒரு குரல் இருக்கிறது. பாலகுமாரன் மதுரைக்குப் போகலாமா. எஸ் போகலாம். அந்த உள்குரல் கட்டளையிடும். எல்லோருக்கும் அந்த உள்குரல் உண்டு. உங்களுக்கு அந்த உள்காது இல்லை. அதை நீங்கள் கேட்பதில்லை. நான் அந்த உள்குரலை மிகத் தெளிவாக கேட்கிறேன்.
வாழ்க்கையினுடைய ஒவ்வொரு க்ஷணமும் நீங்கள் முடிவு செய்தாக வேண்டும். இதுதான் வாழ்க்கையினுடைய மிகப்பெரிய யுத்தம். உட்காருவதா நிற்பதா, போவதா இருப்பதா, சாப்பிடுவதா சாப்பிடக்கூடாதா. ஒவ்வொரு க்ஷணமும் நீங்கள் முடிவு செய்தாக வேண்டும்.
முடிவு செய்வதே, க்ஷணத்துக்கு க்ஷணம் முடிவு செய்வதே வாழ்க்கை. ஆமெனில் எவ்வளவு தெளிவாக ஒருவன் இருக்க வேண்டும். அந்த முடிவு செய்வதில் எவ்வளவு தெளிவாக முடிவு செய்தாக வேண்டும். நண்பர்களே அந்த முடிவு செய்கின்ற பலத்தை தியானம் கொடுக்கும்.
தியானத்தினுடைய முதல் விளைவு அமைதி. பதட்டமின்மை. இது எப்போதோ ஒருமுறைதான் கேட்கக் கிடைக்கும். பிடித்துக் கொண்டால் போயிற்று. விட்டால் அடுத்த ஜென்மம்தான்.
இப்போது நான் சொல்லித் தருகின்ற விஷயத்தை எப்போதோ ஒருமுறைதான் கேட்கக் கிடைக்கும். பிடித்துக் கொண்டால் போயிற்று. விட்டால் அடுத்த ஜென்மம்தான்.
தியானம் என்கிற விஷயத்தை நோக்கித்தான் ஜபதபங்கள், பக்தி விஷயங்கள், தொழுகை. இவையெல்லாம் அதை நோக்கித்தான் தியானத்தை நோக்கித்தான் நடக்கின்றன. எல்லா மதத்திலும் அருவம் என்கிற விஷயத்தை, மிகப் பெரிய சக்தி என்கிற விஷயத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அருவத்தை புரிந்து கொள்ளத்தான் உருவத்தை வைத்திருக்கிறார்கள். அருவ உருவம் என்று வைத்திருக்கிறார்கள்.
வெறும் அருவத்தைப் புரிந்து கொள்ளுவது கடினம் என்பதால் உருவத்தை வைத்து இந்த உருவத்திற்கு அப்பால் இருக்கிறது கடவுள் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இஸ்லாம் மதத்திலே ஒரு நல்ல பாடல். குணங்குடி மஸ்தான் என்கிற அற்புதமான ஞானி எழுதிய பாடல்.
உள்ளுயிரின் உள்ளே உறைந்த பரஞ்சோதி வரின் கள்ளமனம் துள்ளாது என் கண்ணே ரகுமானே.
உள்ளுயிரின், உயிருக்கு உள்ளே உறைந்த, அமிழ்ந்து கிடக்கின்ற பரஞ்சோதி வரின், அந்த வெளிச்சம் வெளியே வரின் கள்ள மனம் துள்ளாது. ஏன் உங்களின் மனம் எப்பொழுதும் கள்ளத்தனம் செய்துகொண்டிருப்பது.
நல்லது கெட்டது, உயர்வு தாழ்வு, அது இது என்று பிரித்துப் பேசிக் கொண்டிருப்பது. இந்த கள்ள மனம்,உள்ளே இருக்கின்ற பரஞ்சோதி வந்தால் எல்லாம் ஒன்று என்பது தெரிந்துவிடும்.
இதை எப்படித் தெரிந்து கொள்வது. யோகப் பயிற்சிகளை தொடர்ந்து செய்யுங்கள். பயிற்சிகள் எல்லாம் கயிற்றில் நடக்கின்ற வித்தை. உங்களுக்குள் ஒரு தாபம் வரவேண்டும். crying for it.
என்னது இது. என்ன பாலகுமாரன். என்ன பண்ணிண்டு இருக்க. எதுக்கு நிக்கற. எதுக்கு பேசற. என்ன சொல்லணும் என்று இடையறாது அவதானிக்க வேண்டும். என்னைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்.
நான் சொல்லுகின்ற பொய்யை, என் காமத்தை, என்னுடைய கதறலை, என்னுடைய கோபத்தை என்னுடைய ஆத்திரத்தை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி மனதை அவதானிக்க, மனதின் மீதே கவனம் வைக்க காமம், ஆத்திரம், கோபம் இவை எல்லாம் மெல்ல மெல்ல ஒரு கட்டுக்குள் வருகின்றது. ஒரு குதிரைக்கு லகான் போட்டது போல.
உங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்காத போது, உங்கள் மனம் என்ன செய்கிறது என்று சிந்திக்காத போது, உங்கள் மனம் என்ன பேசுகிறது என்று நீங்கள் அறியாத போது, நீங்கள் அரைத் தூக்கத்தில் இருக்கிற போது எல்லாம் வந்துவிடும்.
கோபம் வரும். கண்மண் தெரியாத கோபத்திற்கு காரணம் உள்ளுக்குள் என்ன செய்கிறது, எதனால் அந்த கோபம் என்று நீங்கள் பார்ப்பதே இல்லை. அந்த கோபத்தை பார்த்துவிட்டால், அந்த கோபத்தினுடைய விளைவுகள் உடனே அங்கேயே நின்றுவிடும்.
காமம் என்பது உயிரின் இயல்பு. ரத்த ஓட்டத்தினுடைய இயல்பு. ஒரு அழகான பெண் பார்க்கிற போது இரண்டாம் முறை பார்க்க வேண்டும், மூன்றாம் முறை பார்க்க வேண்டும். நான்கு ஐந்து முறை பார்த்துவிட்டால் இவள் எனக்கு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று மனம் விகசிப்பதை தடுக்க முடியாது.
ஆனால் அதிலிருந்து நீங்கள் செய்கின்ற அபத்தத்தை மனம் உற்றுப் பார்க்கின்ற பொழுது, இவள் யார் வீட்டுப் பொண்ணோ. இவள் என் வீட்டு பொண்ணா இருந்தா இப்படிப் பார்ப்பேனா. வேண்டாம். பார்த்து என்ன ஆகப் போகிறது என்று மனம் நகர்ந்தால் வெற்றி. பின்னாலேயே போனால் தோல்வி.
மதுபானங்கள் பளபளன்னு பாட்டில் உடைக்கிறபோது என்னத்துக்கு இது குடிக்கிறான். இது குடிச்சு என்ன ஆகப்போகுது என்று ஒருமுறை மதுபானத்தை உற்றுப் பார்த்தால் கொஞ்சம் தள்ளி கீழ வச்சா, நாளைக்கு குடிக்கலாம் நீ எடுத்துக்கப்பா.
போ... குடிப்பா... இல்லை. இல்லை நாளைக்கு குடிக்கலாம். அந்த மதுவிலிருந்து உற்றுப் பார்த்தால் மனம் அந்த மதுவிலிருந்து விலகிவரும். நாளைக்கு வேண்டாம், நாளைக்கு வேண்டாம், எப்பொழுதுமே வேண்டாம்.
மதுபானம் மட்டுமா, வத்தக் குழம்பு தப்பான விஷயம். உப்பு, புளி, காரம் தப்பான விஷயம் வத்தக் குழம்பு. அந்தணர்கள் உணவிலே மிக மோசமான விஷயம் வத்தக் குழம்பு. மதுவிலிருந்து விடுபடுவது போல வத்தக் குழம்பிலிருந்தும் விடுபட முடியும்.
என்ன சாப்பிடுகிறோம் என்று ஒருவன் தெரிந்து கொள்ள வேண்டும். உணவிலிருந்து தள்ளிப் போய்ட்டா நிற்காது. உங்களை உற்றுப் பார்த்தால்தான் நிற்கும். உங்களை உற்றுப் பார்க்க யோகம் சொல்லித்தரும்.
மூச்சை உள்ளே இழுத்து மூச்சை வெளியே விட்டு அப்படி உட்காரனும். பிறகு மந்திர ஜபம். காத்தால இரண்டு மணிலேர்ந்து ஆறு மணி வரைக்கும் சொல்லிக் கொண்டிருப்பேன். யானையினுடைய துதிக்கையில் சங்கிலியைக் கொடுத்தால், யானையினுடைய தும்பிக்கை அலைந்துகொண்டே இருக்கும்.
சங்கிலியை கொடுத்தா அதை பிடித்துக்கொண்டு இருக்கும். அப்படி இப்படி ஆடாது. மனம் அலையாது மந்திரத்திலே இருக்கும். மனம் மந்திர ஜபத்திலேயே இருப்பதற்கு மந்திரம் ஒரு கருவிதான். அந்த தந்திரத்தை பழகிக்கொண்டால் தானாக தானாக மனதை கவனிக்கின்ற ஒரு நிலைமை வந்துவிடும்.
மனதை கவனிக்க முயற்சித்தால், மனம் பகுக்கத் தெரிந்துவிட்டால் ஒவ்வொரு அசைவும் மிகத் தெளிவாக இருக்கும். நாம் தெளிவாக இருக்கின்ற இடமே சந்தோஷமான இடம்.
நான் நல்லவனா? கெட்டவனா? தெரியலையேப்பா. தப்பு. தெள்ளத் தெளிவாக தெரிந்தாக வேண்டும். நான் நல்லவனா? கெட்டவனா? பாலகுமாரன் பலமுறை கேட்டு இப்பொழுது பாலகுமாரன் மிக நல்லவன் என்ற திடமான இடத்திற்கு வந்துவிட்டான்.
எனக்கு பிறர்மீது, பிறர் சொத்தின் மீது ஆசையில்லை. எனக்கு கோபமில்லை, ஆத்திரமில்லை, எவரைப் பார்த்தும் பொறாமையில்லை. அவர்கிட்ட 12 கார் இருக்கு. இருக்கட்டும் ஒரு கார்லதான போக முடியும்.
அவர் ரொம்ப பணக்காரர். இருக்கட்டும். கொஞ்சம் குழம்பு சாதம் கொஞ்சம் மோர் சாதம்தானே சாப்பிடுறார். நானும் அதான் சாப்பிடுறேன். அவ்வளவுதான்.
அதிகாரம் என்ற ஒரு மமதை ஏற்பட்டுவிட்டால் அது பெரும் கூத்தடிக்கும். ஒருவனுக்கு அதிகாரம் பற்றி சந்தேகம் எப்பொழுது வரும். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் வரும். எப்ப வேணா வரும். தடுக்கி விழுந்தால் கூட மரணம் வரும். அப்படி மரணம் வரும்போது உன் அதிகாரத்துக்கு என்ன அர்த்தம்.
ஆளுமை என்பது ஒரு temporary
attitude. நல்லது செய்வதற்காக கிடைத்தது. அதைப் புரிந்து கொள்கிற போது நல்லது செய்யத் தோன்றும்.
அளவோடு சம்பாதித்தல், அளவோடு உண்ணுதல், அளவோடு பேசுதல், அளவோடு வாழ்தல் என்பதை புரிந்து கொண்டால் மிக உன்னதம்.
எப்படி இந்த மந்திர ஜபம் செய்வது. மந்திர ஜபம் ஒரு வெறி பிடித்தாற் போல செய்தால் ஒரு வழி தெரிந்துவிடும். நான் யோகா கிளாஸ் போறேன். சொல்றதுக்காகவே போறது.
இது என்ன அபத்தம். நாலு பேர்கிட்ட சொல்றதுக்கா. இல்லை. மத்தவங்ககிட்ட சொல்றதுக்கு இல்லை. உன்னை புரிஞ்சுக்கிறதுக்கு. கோபப்படவே படாதே. நான் யோகா போறேன் சொல்லவே சொல்லாதே. நான் தியானம் பண்றேன்னு சொல்லவே சொல்லாதே.
"வெறி பிடித்தது போல" ஆர்வம் என்ற காலமெல்லாம் போச்சு. வெறி பிடித்தது போல செய்தாகணும். கார்த்தால, சாயங்காலம், மத்தியானம், ராத்திரி எப்பொழுதெல்லாம் ஒய்வு கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் தியானமும் யோகாவும் செய்ய வேண்டும்.
எதற்காக? உங்களை நீங்கள் புரிந்து கொள்வதற்காக. புரிந்து கொண்டால் என்ன ஆகும். எதிராளி என்ன என்று தெரிந்துவிடும். மனைவி என்ன சொல்கிறாள் என்று புரிந்துவிடும்.
மனைவியின் தலைவலி புரிந்துவிடும். இன்னைக்கு சமைக்க வேண்டாம். நீ தூங்குடா கண்ணு பார்த்துக்கலாம். ஒன்பது மணிக்கு தள்ளாடி வரும் போது இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாமே. சரி வா. என்ன இப்ப. நான் போய் வாங்கிட்டு வர்றேன். குழம்பு, ரசம், மோர் எல்லாம். சாப்பிட்டு? தூங்கு.
ஒருநாள் இந்த அன்பை காண்பித்தால் போதும். அந்தப் பெண் மயங்கி சரிந்துவிடுவாள். பல நாள் இந்த அன்பைச் சொல்கிறபோது அவளுக்கு புருஷன் என்கிற நினைப்பு போய் நண்பன் என்ற நினைப்பு வரும்.
எந்தப் புருஷன் நண்பனாக இருக்கிறானோ அவனுக்கு பணிவிடைகள் செய்வதில் அவள் மிகுந்த ஆர்வம் காட்டுவாள். அந்த இரண்டு பேருக்கும் பிறக்கின்ற குழந்தைகள் அற்புதமாக வளரும்.
ஆக எதற்குத் தியானம். உன் மனைவியைப் புரிந்து கொள்ள. Life is
relationship தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. அடுத்தவரோடு தொடர்பு கொள்ளுவதுதான் வாழ்க்கை. அடுத்தவரை புரிந்து கொள்வதுதான் வாழ்க்கை.
You
understands your wife. You understands your marriage. You understands Your
friend, your brother.
என்னை தொந்தரவு பண்ணனும்னு நினைக்காத. விலகிவிடு. உன்கிட்ட இருந்து ஒண்ணுமே வேணாம். You are not
existing. என்னைப் பொறுத்த வரையில் நீ உயிரோடே இல்லை போ என்று ஒதுக்கக்கூடிய திடம், பலம் தியானத்தால் வரும்.
மிகப்பெரிய அமைதி அங்கு வந்துவிடும். வெறி பிடித்தது போல. Underline this word. வெறி பிடித்தது போல தியானம் செய்ய வேண்டும்.
வெட்கமில்லாத சொல்லட்டுமா. மெரினா பீச்சுல கையை விரிச்சு நின்னு உள்ள வா உள்ள வா அப்படீன்னு லூசு மாதிரி கத்தினேன். ஒரு கிழவி 75 வயசு கிழவி தண்ணில இருந்து வந்தா. கபீர்ன்னு இருந்தது.
அது வழக்கமா அந்தப் பக்கம் போற மீனவப் பெண்மணி. ஆனா அது ஒரு நம்பிக்கையை கொடுத்தது. ஒரு மீனவப் பெண்மணி வரும்போது தேவதை வராதா.
நண்பர்களே தேவதையும் வந்தது. எப்படி. என்னுடைய அமைதியின் மூலமாக என்னுடைய தெளிவின் மூலமாக எனக்கு ஒரு குரு கிடைத்தார்.
Balakumar
is my pen. If at all there is any rebirth this begger, Yogiram surathkumar தன்னை begger என்று சொல்லிக்கொள்வார். If at all
there is any rebirth this begger like to be with balakumar.
Whatever
balakumar writes will be remembered here for a long long time. பாலகுமாரன் எழுதிய எல்லாமும் இங்கு வெகுகாலம் கொண்டாடப்படும்.
என்னை அருகே அழைத்து முதுகு தடவி, தலை தடவி Balakumar you
have been sent by my father to praise the Lord. கடவுளைக் கொண்டாடுவதற்காக கடவுள் என்னிடம் அனுப்பித்த நபர் பாலகுமாரன்.
சத்திய சொரூபம் அது. காசு கொடுத்து வாங்க முடியாது. ஈ ன்னு பல்லை காமிச்சுண்டு தங்கத்துல ருத்ராஷம் போட்டுண்டு இருக்கறது இல்ல. தலை முடியை விரிச்சுண்டு கையில் சூலம் வச்சுக்கறது இல்லை.
சத்திய வெளிச்சம் வந்தபோது நீ உடுத்திக் கொண்டாலும் சரி, உடுத்தாவிட்டாலும் சரி. அழுக்குத் துணியாக இருந்தாலும் சரி, சலவைத்துணியாக இருந்தாலும் சரி.
துணிகளைத் தாண்டி உன் கண்களில் இருக்கிற காந்தம் இழுத்துக் கொண்டு வந்து ஆட்களை உட்கார வைக்கும். அப்படித்தான் யோகிராம் சுரத்குமார் முன்னாடி லட்சக்கணக்கான ஜனங்கள் வந்து சேர்ந்தார்கள்.
மார்புக் குழியிலிருந்து ஒரு விரல் நுனி தள்ளி நெல்லின் முனையிலுள்ள ஒரு துவாரம் போன்ற ஒரு இடத்தில் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்திதான் உங்களை உயிருடன் இருக்க வைக்கிறது. அதற்குத்தான் உயிர், ஆத்மா, ஜீவன் என்று பெயர்.
அந்த தரிசனம் ஏற்பட்டு விடும். ஓ நீ இருக்கியா. இங்க இருக்கியா. இதுதான் பாலகுமாரனா. அது இல்லையா. உனக்கு பாலகுமாரன்னு கூட பேர் கிடையாதா. உடம்புக்குத்தான் பாலகுமாரன்னு பேரா. ஆனா நீ இல்லைன்னா உடம்பு இல்லை. நீ இருந்து என்ன பண்ற.
எது குண்டலினியோ, எது சக்கரங்களோ, எது ஆதாரமோ அவைகளை இந்த ஆத்மா உசுப்பி சுழல விட்டுக் கொண்டிருக்கிறது. மூலாதாரம் மலத்தைவெளியே தள்ளுகிறது. மணிபூரகம் குறி விறைப்பு, விந்து உற்பத்தி செய்கிறது.
ஸ்வாதிஷ்டானம் ஜீரண சக்தியை ஏற்படுத்துகிறது. அனாஹதம் இருதயம், நுரையீரல், இரைப்பை, கணையம் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறது. விசுத்தி மண்டையிலிருந்து வருகின்ற ரத்த நாளம், குரல், பேச்சு, ருசி சகலமும் கவனித்துக் கொள்கிறது.
ஆஞ்ஞை இதுதான் புத்தி. மூளையினுடைய மொத்த பலமும் இங்கதான் இருக்கு. சகஸ்ரஹாரம் இதுதான் சாவதற்குண்டான வழி. இதுதான் மரணத்தின் வாசல். நான் சொல்லுவது சத்தியமான விஷயம். இதைப் புரிந்து கொள்ளுங்கள்.
என்ன ஆகும். உள்ளிருக்கிற ஆத்ம தரிசனம் செய்ய இந்த குண்டலிணியோட விசைகள் வேகமாகவும், தெளிவாகவும், திடமாகவும் இருக்கும். மூலாதாரம் விழித்துக்கொள்ளும்.
அப்படி ஒரு தரிசனத்தை நான் பார்க்க முடியாது. நான் தவம் செய்து தவம் செய்து பெறவேண்டிய தரிசனத்தை என் குருநாதர் பிச்சை போட்டது போல வெகு எளிதாக பாலகுமாரன் உள்ளே செலுத்தினார்.
இடுப்பு தடவி விட்டார். மூலாதாரத்திலிருந்து பந்து கிளம்பி ஹா... கருப்பு வெள்ளைப் புகை, அறுகோண முக்கோணம், நீலம் ரீய்ங்... ரீய்ங்... என்ற சத்தம். இன்றும் காதுக்குள்ளே எனக்கு அந்த சத்தம் இருந்துகொண்டே இருக்கும்.
விசுத்திக்கு போகும் போது மூஞ்சியில வேற விதமான ஒரு glow இருந்தது. ஆஞ்ஞைக்கு வருகிறபோது எதிரே உட்கார்ந்திருக்கிறது யார்? அவருக்கு என்ன பிரச்சனை தெரியும்.
ஒரு கூரை மீது ஏறிக்கொண்டு பாருங்கள். ஒரு வீட்டு மொட்டை மாடில நின்னு அதோ வண்டி வருது, இங்க ஒரு ஆள் போறார். அங்க ஒருத்தன் நடந்து போறான் என்று இந்த உலகத்தினுடைய இயக்கம் பற்றி இந்த ஆஞ்ஞை மூலம் தெரியும்.
ஐயா உடம்பெல்லாம் வலிக்குதுய்யா. என்ன பிரச்சினை தெரியலை. தூக்கமேயில்லை. நாளைக்கு சரியாயிடும். போயிட்டு வா. அப்போ எப்படி? நாளைக்கு சரியாயிடும். போயிட்டு வா. மறுநாள் போன் வருது சரியாயிடிச்சுன்னு. நான் செய்யவில்லை. என்னுடைய ஆஞ்ஞையினுடைய பவர்.
இது மாதிரி பல விஷயங்களை என்னுடைய உதவியாளர் பாக்கியலட்சுமி அருகேயிருந்து பார்த்திருக்கிறார்.
யார் நீ? ஐயா குழந்தை இல்லை. உடம்புல பிரச்சினை.கீழ உட்கார். நீதான் புருஷனா பின்னாடி நில்லு. அவள் கட்டை விரலை எடுத்து வாயில் வைத்து கடித்து, கணுக்காலையும் முழங்காலையும் தடவி விட அன்றிலிருந்து அறுபதாவது நாள் அவள் சூல் கொண்டுவிட்டாள்.
சூல் கொண்ட டேட் டாக்டர் சொல்றார். எந்த டேட். அந்த டேட். அந்த ஐயா என் காலை கடிச்ச நாள் அன்னிக்கா. பாலகுமாரனைப் பற்றி அலட்டிக்கொள்வதல்ல. எனக்குத் தேவையே இல்லை.
என்னை அலட்டிக்கொள்ள ஏகப்பட்ட விஷயம் இருக்கு. 272 நாவல் இருக்கு. இது காலாகாலத்திற்கும் என்னை சொல்லிக் கொண்டிருக்கும். நான் பெரிய சித்தர், மந்திரவாதி, மாயவாதி இல்லை.
என் குருநாதருடைய புகழைச் சொல்வது. நாத்திகம் என்ற முட்டாள்தனத்தில் ஈடுபடாதீர்கள் என்று சொல்வது.
முட்டாள்தான் அந்த வழியில் போவான். முரடன்தான் அந்த வழியில் போவான். தேடி கண்டு கொண்டு வா. தேடாத சொல்லாதே. தேடியிருந்தால் கடவுளைக் கண்டிருப்பாய்.
ஒரு நல்ல உத்தம குரு நினைத்தால் உங்களை தூக்கி நிறுத்த முடியும். உங்களுக்கு வேறு இடத்தை காட்ட முடியும். அந்த மாதிரியான ஒரு பலத்தை நாம் பெற வேண்டுமானால் யோகா.
நீ தியானம் பண்ண ஆரம்பிச்ச உன்னால டிவி பார்க்க முடியாது. நியுஸ் பார்க்க முடியாது. பாட்டுப்பாட முடியாது. சினிமா பார்க்க முடியாது. ஒரு silence.
Enormous silence. Deep death க்கு போற
silence எல்லா சத்தத்திலிருந்தும் விடுபட்டு பூரண அமைதியில் இருக்கலாம்.
அப்போது அடுத்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள உங்களால் முடியும். தொடர்பு கொள்ளுதலே வாழ்க்கை. Life is
relationship. நல்ல மனிதர்கள் சூழ்ந்து கொள்வார்கள். நல்ல மனிதர்கள் சூழ்ந்துகொண்டால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
அப்ப காசு பணம். சந்தோஷத்திற்குத்தான் காசு, சந்தோஷத்திற்குத்தான் காமம். சந்தோஷத்திற்குத்தான் உணவு. அது நூறு ரூபாய் காசிலும், வெறும் தயிர் சாதத்திலும், சுமாரான அழகுள்ள ஒரு உண்மையான பெண்மணியின் அரவணைப்பிலும் உங்களுக்கு கிடைக்கும்.
ஆறு தட்டு சாப்பாடு வச்சு என்ன பண்ணுவ. ஒரு வீடு போதும். அதற்குண்டான உழைப்பை செய்வதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும், பெண்ணிடம் சுகம் பெறுவதற்கும் இந்த தியானம் உதவி செய்யும்.
எவனொருவன் அழுத்தம் திருத்தமாக நடக்கிறானோ அவனால் அச்சூழலில் சிறப்பாக நடக்க முடியும். வெறி பிடித்தாற் போல தியானம் செய்யுங்கள். இல்லையெனில் நீ வெறும் குப்பைத்தொட்டி.
எல்லா மயக்கத்திலிருந்தும் விடுபட்டு அமைதியாக இருக்க தியானம் உதவி செய்யும் என்பதை தியானத்தால் உயர்ந்த, தியானத்தால் அமைதிபெற்ற, தியானத்தால் ஒரு குருவினுடைய அருளைப்பெற்ற,
தியானத்தால் வருகிற ஜூலை 5ம் தேதி 70 வயது பூர்த்தி செய்யப் போகிற, பீமரத சாந்தி காணப்போகிற ஒரு நண்பன் என்ற முறையில், நன்கு வாழ்ந்தவன் என்ற முறையில் உங்களுக்கு பலமாக தியானத்தையும், யோகத்தையும் சிபாரிசு செய்கிறேன்.
இதை சொல்லிக் கொடுக்கின்ற ஒருவரை நீங்கள் குரு என்று அழைப்பதில் தவறில்லை. ஆனால் குரு என்கிற இடத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்ற இலட்சியத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
அது உங்களுடைய வாழ்க்கையை உன்னதமாக்கும் என்று சொல்லி உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். வணக்கம்.
நன்றி.

முழுவீச்சாய் வாசிக்கும்போது, இன்னும் உள்ளே பலப்படுகிறது...நன்றி சரஸ்வதி சுவாமிநாதன்...
ReplyDeleteஸ்வாதிஸ்டானம்,மணிபூரகம் இடம் மாறியுள்ளதே??!!
ReplyDeleteஸ்வாதிஸ்டானம்,மணிபூரகம் இடம் மாறியுள்ளதே??!!
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
மிக அற்புதமான பதிவுகள்
நன்றி அய்யா..
யோகி ராம்சுரத்குமார்
ReplyDeleteயோகி ராம்சுரத்குமார்
யோகி ராம்சுரத்குமார்
ஜெய குரு ராயா
மிக அற்புதமான பதிவுகள்
நன்றி அய்யா..