விஷாதயோகம் - வியப்புரை



யோகிராம்சுரத்குமார்





வியப்புரை
  
உத்தவ கீதை என்று ஒன்று உண்டு. பாகவதத்தின் இறுதிப் பகுதியில் உத்தவரும் கிருஷ்ணரும் பேசிக்கொள்ளும் நீண்ட நெடும் உரையாடல் பகுதி இது. இதன் சிறப்பு என்னவெனில், பகவான் கிருஷ்ணர் தன்னை முழுவதும் வெளிப்படுத்தியது உத்தவர் என்கிற உத்தவசுவாமியிடம்தான். ஏனெனில், கீதை முழுவதும் கிருஷ்ணன் யோகியாகவே வலம் வருவான். அர்ஜுனனை முன்னிலையாகக் கொண்டு சகல ஆன்மிக மார்க்கங்களையும் தரிசிக்கச் செய்வான். ஆனால், உத்தவ கீதையில் தனக்குப் பிடித்த சிறு பூ, பட்டாம்பூச்சி, மாதம் ,வேதம், கானம் என்று பெரும் பட்டியலைக் கொடுப்பான். ‘‘உத்தவா நான் உன்னிடம் மட்டுமே என்னைக் கொட்டித் தீர்த்துக்கொண்டிருக்கிறேன்’’ என்பான். இந்த நூலும் அதுபோன்றுள்ளது. அணுக்கம் நிறைந்ததாக உள்ளது. விஷாத யோகம் உத்தவ கீதையைப் போலல்லவா இனிக்கிறது என்று தோன்றியது. ஏனெனில், ஐயா பாலகுமாரன் அவர்கள் கேட்கப்படும் கேள்விக்கும் மேலானதொரு வினாவை உள்ளுக்குள் தோற்றுவித்துக்கொண்டே நகர்கிறார். பல இடங்களில் வினாவை விரித்து பதில்களால் வினாவை நிறைவு செய்கிறார். பொதுவாகவே, இதுபோன்ற கேள்வி பதில்கள் ஒரு குட்டையின் பக்கவாட்டில் வீசப்பட்ட சில்லு ஓடானது வெட்டி வெட்டி நகர்ந்து நான்கு முறை துள்ளிப்பறந்து நீரில் மூழ்கும். அட... என ஆச்சரியம் காட்டும். அதோடு, சில நிமிடங்களில் மனதில் பதில்கள் கரைந்துபோகும். ஆனால், கடலின் ஆழம்போல அடர்த்தியை நோக்கிய சவாலை இந்நூலில் அளித்திருக்கிறார். மீண்டும் மீண்டும் கூர்சீவப்பட்ட பென்சில்போல இதற்கு முன்னர் பல இடங்களில் சொன்ன பதில்களின் ஆழங்களுக்குள் இட்டுச்செல்கிறார். 

‘‘அடர்ந்து இருள் படர்ந்து அழகாய் இருக்குது காடு... எனும் இராபர்ட் ஃப்ராஸ்ட் கவிதை முன்கதைச் சுருக்கத்தில் விதையாய் விழுந்திருக்கும். இப்போது இத்தனை வருட இடைவெளிகளில் எத்தனை பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கிறது. அந்தக் கவிதைக்கு எப்பேர்பட்ட நுட்பமான பொருளைத் தன் வாழ்வின் அனுபவக் களத்திலிருந்து கொடுக்கிறார், பாருங்கள். கவிதை வாழ்வாகி வரும்போது அது உயிர்பெற்று விடுகிறது. அவர் வாழ்வெனும் கானகத்தின் எண்கோணத்தையும் தரிசித்ததின் அனுபவத்தை காட்டைக் கடந்துவிட்டதாக கூறுகிறார். மாலன், சுப்ரமணிய ராஜூவோடு பழகும்போதே தன்னுள் இருந்த குருவிற்கான தேடலை அடையாளம் கண்டிருக்கிறார். பாறையினடியில் ஊறும் ஊற்றுபோல அது ஓடியிருக்கிறது. பூர்வ ஜென்மமாய்த் தொடர்ந்து வந்து பகவான் யோகிராம்சுரத்குமார் அவர்களிடம் நிறுத்தியிருக்கிறது. இந்தத் திரும்பிப்பார்த்தலே ஒரு எழுத்தாளர் வாசகனுக்குக் கொடுக்கும் வரைபடம். கை விளக்கு. ஒரு வாசகன் அங்கு தன்னைப் பொருத்திக்கொண்டு வாழ்வெனும் பாதையில் இன்னும் வேகமாக நடக்கத் தொடங்குவான். எனக்கு அப்படி இருந்தது. உனக்கெப்படி என்று பார்த்துக் கொண்டு நட.

எழுத்தாளருடையை மிகப்பெரும் பணியே தான் கண்ட, அனுபவித்த, அவதானித்த ஒரு நிகர் வாழ்க்கையை வாசிப்பவனின் இதயத்திற்குள் ஊடுருவச் செய்வதேயாகும். மொழி அதற்கொரு படகு. அவ்வளவே. என் கண்மணித் தாமரை படித்தால் சாக்தத்தின் உயரமும், பிரேமையும் எளிதாக உள்ளுக்குள் இறங்கும். ஆசையாகச் செய்வதற்கு ஆர்வம் பெருகும். மொழியிலிருந்து வழிந்த வரிகள்கூட மறந்துபோகலாம். ஆனால், புத்தகத்தினுள் பொதிந்து அதன் வழியே போன அனுபவம் வாசகனை மேலேற்றும். பாலையாகி இருந்தது நல்ல நிலமாகும். இந்த நிலம் பண்படுத்தலைத்தான் பாலகுமாரன் தன் எழுத்து மூலம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். பாலகுமாரனின் வாசகர்கள் என்போர்கள் சாதகர்கள் என்கிற தகுதிக்கு உயர்ந்தபடியே இருப்பார்கள். காதல் கதையின் வாசகனாக உள்ளே வருபவன் ஆத்மீக சாதகனாக வெளியேறுவதை அவரின் வாசகர்கள் சொந்த அனுபவத்தைக்கொண்டே உணரலாம். ஓரிடத்தில் தீயதைத் தீயது என்று சொல்ல ஒரு தெளிவு வேண்டும் என்பார். அது தகப்பனாக இருந்தாலும் சரி போன்ற சவரக்கத்தியின் கூர் வாசகங்கள் சொந்த அறத்தின் துலாக்கோல் முள் விமர்சனமுள்ளாக்கும். இவ்வரியினூடாக சொந்த வாழ்வின் கதவுகளை திறந்துகொள்ளவேண்டும். அவ்வளவே. 

பெரும் நீதிகளையும், நியமங்களையும், தத்துவங்களையும் பலபேர் பாலாடையில் ஊற்றப்பட்ட மருந்தைக் கைகாலை இறுக்கி ஓரவாயில் ஊட்டுவதுபோல கொடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவரின் நூல்கள் தேன் தடவிய பலாச் சுளை போல வழுக்கிக்கொண்டு உள்ளே சென்றன. அதேசமயம், இந்த நூலிலுள்ள பல்வேறு பதில்களைப் படித்துவிட்டு நகரக்கூடாது. மூளையின் அறிவுச் சேகரத்தில் கொண்டுபோய் வைத்துவிடலாகாது. மாவடு ஊறுவதுபோல மீண்டும் மீண்டும் பதிலோடு இருக்கவேண்டுமென்று மனதிற்குக் கட்டளையிட வேண்டுமென்பது என் அபிப்ராயம். இத்தருணத்தில் ஜே. கிருஷ்ணமூர்த்தியின் முக்கியமான மகாவாக்கியம் நினைவிற்கு வருகிறது. Stay with the statement என்பதே அது. எப்போதுமே அவர் மீண்டும் மீண்டும் இந்த வாக்கியத்தைச் சொல்லியபடி இருந்தார். நகராதீர்கள். நான் சொன்ன வாக்கியத்தோடு இருங்கள் என்றார். இல்லையெனில் மனம் தத்துவத்தின் சாரத்தை உதிர்த்துவிட்டு அதையும் Entertainment வகையறாக்களில் சேர்த்துக்கொள்ளும். தத்துவம் கேட்பதும் செவியின் புலனின்பங்களில் ஒன்றாக மாற்றிக்கொள்ளும். இதயத்திற்குக் கடத்தமுடியாது. நம் மூளை எனும் அலமாரியில் அதற்கொரு இடம் கொடுத்து தத்துவத்திற்கு சமாதி கட்டுவோம்.

முக்கியமாக யோகியை முதன்முதலாக சந்தித்துப் பேசிய தருணம்பற்றிய பதில்.‘மனதின் கட்டளையில்லாமல் ஒரு மனிதனின் பேச்சும், அவன் புலன்களின் செயல்களும் இருக்குமாயின் அது ஒரு உன்மத்த நிலை.’’  ‘‘அவர் இடத்தில் இருக்கையில் அது புரியாது. பிற்பாடு வெளியே வந்து மாடு அசைபோடுவதுபோல் நிகழ்வுகளை மீண்டு கவனிக்க அது புரிபட்டுவிடும்’’ போன்ற வாக்கியங்களை இன்னொரு முறை சான்றோர்களோ அல்லது குருவின் முன்போ அமரும்போது நினைவிற்கு வரவேண்டும்.

ஐயாவின், குண்டலினி எழுச்சி குறித்த பதில்கள் யாவையுமே பின்னால் நான் படித்த யோகியின் சுயசரிதத்தில் பரமஹம்ச யோகானந்தாவிற்கு யுக்தேஷ்வர் குருஜியால் தூண்டப்பட்ட இதே போன்றதொரு குண்டலினி எழுச்சியோடு பொருத்திக்கொண்டேன். ஐயாவைப் போலவே வேறொரு நண்பருக்கும் குண்டலினி தூண்டப்பட்டது. அப்போது அந்த மூலாதாரத்திலிருந்து மஞ்சள் புகை பொங்கியபடி இருந்ததாம். இந்தத் தொடக்கத்தையே, நாம் ஏன் முதலில் நம் வீட்டில் மஞ்சப் பொடிப் பிள்ளையாரை செய்துவருகிறோம் என்று ஒப்பிட்டுக்கொண்டேன். ஆனால், ஐயாவை யோகி அவர்கள் நேரடியாக அனாகதத்தை தொடச் செய்தார். ஏன், அனாகதம் என்று ஐயா கேட்டபோது, மூலாதாரம் உள்ளிட்ட மற்ற சக்கரங்களெல்லாம் போன ஜென்மத்திலேயே விழிப்பு பெற்று விட்டது என்று பகவான் கூறியதாக ஐயா கூறுவார். 

 அக தரிசனங்கள் புறத்திலே கிரியையாக மாறும் போலிருக்கிறது என்று சொந்த வரையறையை, அது சரியோ தவறோ அப்போது அமைத்துக் கொண்டேன்.

ஒன்று மட்டும் அப்போது எனக்குப் புரிந்தது.

ஞானிகள் சமூகத்தில் முக்கியமாக தனி மனிதருக்குள் மாற்றம் செய்யவேண்டிசீடர்களைத் தேர்ந்தெடுத்து கருவியாக்குகிறார்கள். இம்மாதிரியான அனுபவமுற்றோர் விவேகானந்தர் ஈறாக பல்வேறு சீடர்கள் குருவின் அருளால் அவரின் துணை கொண்டு சமூகத்தில் வலுவான பெருந்தாக்கதை ஏற்படுத்துகின்றனர். இதையே யோகி அவர்கள் என் தந்தையின் பணி என்று சொல்லிக்கொண்டிருந்தார். பாலகுமாரன் அவர்களின் எழுத்து வழியே யோகி பெரும் பாய்ச்சலை வாசகர்களுக்குள் நிகழ்த்தினார் என்பதை கொஞ்சம் கூர்மையாக கவனித்துத்தான் புரிந்துகொள்ளமுடியும். அப்போதைய அவருடைய எழுத்துக்கள் கவிதை கொடுக்கும் மயக்கமாக இல்லை. தோளில் சாய்ந்துகொண்டு கடலையே பார்த்துக்கொண்டிருக்கும் போதை நிறைந்த பதின் பருவ எழுத்தும் அல்ல. எல்லாமே வாழ்வைக் குறித்த தேடல் நிறைந்த தத்துவ அலைக்கழிப்புகளை செறித்துச் செறித்து உள்ளே தள்ளிய நாவலாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார். அது பாக்கெட் நாவலாக வந்தாலும் சரி. பதிப்பகங்களில் வரும் பெரிய புத்தகமாக இருந்தாலும் சரிதான். இப்போது இந்தத் தொகுப்பில் வரும் அந்தக் குண்டலினி அனுபவத்தைப் படிக்கும்போது புத்தம்புதியதாக இருக்கிறது. கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா என்பதற்குண்டான விளக்கத்தைப் படிக்க, என் கல்யாண நாள் முகூர்த்த நேரம் எப்போது என்று குருவை நோக்கி ஏக்கம்கொள்ள வைக்கிறது. கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா... எனும் வாக்கியம் ஒரு அனுபூதிமானின் முன்பு எப்படி மாறுகிறது. சொல்லும் வாக்கும் அதன் பொருளும் ஞானியரின் முன்பு எப்படி அகண்டாகாரம் கொள்கிறது பாருங்கள்.

திரண்ட பொருளும், தேறிய கருத்துகளும் பல விடைகளில் இறுதி வடிவத்தை எடுத்திருக்கின்றன. எங்கெல்லாம் விரிவாகச் செல்லும் பார்வை தெரிகிறதோ, வெளிச்சம் படுகிறதோ அங்கெல்லாம் நம் புத்தியையும் எடுத்துச் சென்றிருக்கிறார். கேள்வி கேட்பவரும்... இந்த வரிக்கு என்ன அர்த்தம். இந்த வார்த்தையை ஏன் இங்கு சொல்கிறீர்கள் என்பதாக பூமிக்கடியில் செல்லும் நீரோட்டம்போல ஐயாவின் பதிலுக்குள் புகுந்து வினாக்களை விரிக்கிறார். ஒவ்வொரு பதிலும் பாராசூட்டிலிருந்து பூமியைப் பார்க்கும் பரவசத்தைத் தருகிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே உபநிஷதத்தின் சிறு வாக்கியம் நினைவிற்கு வந்து ஆச்சரியத்தைத் தந்தது. அதாவது, உபநிஷதம் எதை ஆனந்தம் என்று சொல்கிறது தெரியுமா? அறிதலே ஆனந்தம் என்கிறது. அறிவார்ந்த புத்தியின் அறிதலிலுள்ள ஆனந்தத்தில் தொடங்கி தன்னை அறிதலில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. ஒவ்வொரு படியிலுள்ள ஆனந்தத்தை அலசுகிறது. கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆனந்தம் உடையவருக்கு இப்புத்தகம் ஆனந்தம் தரும்.    

‘‘எனக்கு Senility வராது. I will keep quiet, silent ஆயிடுவேன். இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, மரணத்தைப் புரிந்துகொண்டு, இனி பேசிப் புண்ணியமில்லையென்று புரிந்துகொண்டு மௌனமாக மரணத்தை நோக்கி எதிர்பார்த்து உட்கார்ந்துகொண்டிருப்பேன்’’ என்றொரு இடத்தில் பதிலளிக்கிறார். இதுதான்... நம் ஒவ்வொருவரும் இலக்காக்கிக்கொள்ள வேண்டிய விஷயம். ஏனெனில், ஒவ்வொருவரும் தவிர்க்கமுடியாத மரண சந்தர்ப்பத்தில் செய்யவேண்டியதைக் கூறுகிறார். இத்தனை எளிமையான விளக்கத்தை எவராலும் கூற இயலாது.  

நம் வாழ்வில் முதல் பத்து முக்கிய விஷயங்களை வரிசையிடுவோமல்லவா? ஆனால், முதல் பத்து விஷயங்களை இவரின் புத்தகங்களைப் படித்தபிறகு மனம் மாற்றிக்கொள்ளும். முதல் பத்து முழுவதும் குருவிற்கு கொடுத்துவிடவேண்டும். பதினொன்றிலிருந்து பிராரப்த லௌகீக கர்மாவான அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் என்று நிரப்பவேண்டும்.

பாண்டவர்கள் கூட தவறு செய்தார்கள். கிருஷ்ணா நீ என் பின்னே நில் என்றார்கள். ஆனால், சகுனி பின்னால் தோற்றாலும்கூட ஆரம்பத்திலேயே துரியோதனன் தன் குருவாக சகுனியை வரித்து முன்னே நில் நான் வேடிக்கை பார்க்கிறேன் என்றான். இவரின் நூல்களைப் பழுதறப் படித்தவர்கள், ராமாயணத்தைப் படித்தபிறகு ராமா எனும் நாமாவை எப்படி ஸ்வீகரித்துக்கொள்வார்களோ அதுபோல யோகிராம்சுரத்குமார் என்கிற திவ்ய நாமத்தை ஏந்திச்செல்வார்கள். அதுவே இவரின் நூல்களின் இலக்காகவும் அமையும். துவைதமோ அத்வைதமோ எப்போது பெருநிலை சித்திக்குமோ தெரியாது குருவின் நாமத்தைச் சொல்லிக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. நாமத்தின் திறவுகோல் மிகப் பெரிது. ராம பாணம் போன்றது யோகியின் நாம பாணம். அந்த நாமத்தை நமக்குள் ஈட்டியாய்ச் செருகினார் பாலகுமாரன்.

ஐயாவின் நாவல்களே மிக விரிவாகக் காதலையும் காமத்தையும் பேசின. இப்போது இந்த நூலிலும் காமத்தைக் குறித்த கேள்விகளுக்கான பதில்களை இன்னும் விரிவாக ஆழமாக அகலமாகச் சொல்கிறார். காமத்தின் நுட்பங்களைப் பட்டியலிட்டு, இறுதியாக மனம் ஒருமாதிரி சிரங்குப் புண்ணைக் கீறிக்கொண்டேயிருப்பதுபோல சொறிந்துகொண்டிருக்கும் தன்மையைச் சுட்டிக்காட்டுகிறார். இன்னும் மையத்தின் கருவாக காமத்தின் கருவான பேராசையில் கொண்டுபோய் நிறுத்துகிறார். நம்முடைய சொந்த அனுபவங்களையும் ஐயாவின் வார்த்தைகளையும் பின்னிப் பின்னியே இந்த பதில்களை நமக்கானதாக மாற்றிக்கொள்ளவேண்டும். நாள்பூராவும் காமத்தைச் சிந்திப்பது என்பது தரித்திரம் என்பதும், செயலைச் செய்யமுடியாமல் சதா காமத்தின் அலையல் செய்யும் என்பதும் மிக முக்கியமானதாகும். அதுவே வாழ்வின் ஆதாரமான சக்தியாகவும் உயிர்ப்பாகவும் இருக்கச் செய்யும் என்பதின் முரணே காமத்தின் தொகையாகும். எனவே, கவனி என்கிறார். அது உங்கள் தொழிற்படும் நாணைச் சுற்றி வளைத்து, பிடியை இறுக்கி நகரவொட்டாது செய்யும் சர்ப்பமென எச்சரிக்கிறார். காமம் வாழவும் விடாது. சாகவும் விடாது. காலைச் சுற்றிய பாம்பு. வெறுமே கவனிக்க சற்று நேரம் பொறுத்து தரையிறங்கி ஊர்ந்து செல்லும்.

இதுதான் குருவின் கருணை. உணவை உற்றுப்பார்ப்பதுபோல், காமத்தை உற்றுப்பார்க்கவேண்டும். இந்தக் காமம் சார்ந்த விஷயங்கள் பலதும் இருக்கின்றன. அவை சிகை, முக, உடல் அலங்காரம் உடன் சம்பந்தப்பட்டவை. இவையெல்லாம் காமத்தோடு நெருங்கிய தொடர்பு உடையவை.

இந்த வாக்கியங்களின் உள்ளுக்குள் நுழைந்துகொண்டாலன்றி காமத்தை   மாடியிலிருந்து தெருவைப் பார்ப்பதுபோல பார்க்கமுடியாது. அது எதன் துணையோடு வருகிறது என்பதெல்லாம் நுணுக்கிப் பார்க்கவேண்டிய விஷயம். நடைமுறையில் செயலளவில் இல்லாது போனால் சறுக்கத்தான் வேண்டும் என்பதைக் கிழவர்கள் படும் அவஸ்தையைக் காட்டியும் இறுதி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்தப் புத்தகத்தில் எழுத்தாளர் பாலகுமாரன் தன்னுடைய பதிலாக மட்டும் சொல்லாமல், யோகிராம்சுரத்குமார் அவர்களின் பதிலாகவும் பல்வேறு விஷயங்களைக் கூறியிருக்கிறார். அதிலொன்று சந்நியாசம் குறித்தது. எனக்குத் தெரிந்து இதை வேறு எந்த நூலிலும் இதற்கு முன்பு சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

பகவான் சந்நியாசத்தைக் குறித்து, This beggar is afraid of saffron என்று சொன்னதாகச் சொல்லியிருக்கிறார். இந்த வார்த்தைகளின் மீது அவர் காட்டும் கடும் தாக்குதல் மிகுந்த வரிகள் நகைச்சுவை மிகுந்ததாகவும் இருக்கின்றன. ஐயா, எப்போதுமே ஏதேனும் புத்தகத்தின் பெயரைச் சொல்லியெல்லாம் பிரமிக்க அடித்து பதிலைச் சொல்வதில்லை. வாட் ஈஸ் சந்நியாசா.... என்று அடித் தொண்டையில் பேசமாட்டார். தன் சொந்த அனுபவத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் தான் கவனித்த விஷயத்தை மட்டுமே பதிலாகத் தருவார். இன்று சந்நியாசி என்று சொல்லிக் கொள்வோர்கள், எப்படி இருக்கிறார்கள் என்பதை ஐயாவின் இதற்குண்டான பதிலைப் படித்து புரிந்துகொள்ளுங்கள்.

‘‘சந்நியாசமும் கிரஹச்சாரியமும், பிரம்மச்சாரியமும் அமைதியை நோக்கி அழைத்துப் போகவில்லையெனில் இவை அத்தனையும் வீண். நீங்கள் எதைநோக்கி நடக்கிறீர்கள் என்பதே முக்கியம். எந்தப் பாதை வழியே என்பதல்ல’’ எனும் வரிகளும், ‘‘காவியை உடுத்திக்கொண்டு பெண்ணின் மார்பகத்தை வெறித்துப் பார்ப்பதில் எந்த லாபமும் இல்லை. இதற்குப் பதிலாக இரவில் மது அருந்திவிட்டு விபச்சாரியிடம் போகின்ற பணக்காரனாக வாழலாம். எதை ஆசைப்பட்டோமோ அது பூர்த்தியாகின்றபோது, பூர்த்தியானதாலேயே விடுதலை ஏற்படும். மேலே காவியும், உள்ளே அழுக்குமாய் இருப்பவர்க்கு எந்த ஞானமும் எந்த நாளும் வராது’’ என்கிற வாக்கியங்களும் உண்மையை செவிட்டில் அறைகின்றன.

‘‘திருவண்ணாமலை கவிழ்ந்த பாத்திரம் என்று சொன்னது மட்டுமில்லாமல் அதைப் பார்த்துப் பரவசநிலையில் நான் It’s hollow bhagavan... it’s hollow என்று கத்தியபோது அதன் உள்ளே ஒரு இடுக்கு வழியாகப் போய்வரவும் முடியும் என்று சொல்லியிருக்கிறார்’’ என்கிற இந்தப் பதிலை பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

இந்த வாக்கியமே என்னை பகவான் ரமண மகரிஷியிடம் அழைத்துப் போனது. அருணாசல கிரிவலத்திற்கு ஏன் அத்தனை முக்கியத்துவம் அளித்தார் என்பதை நான் நூலாக எழுதுவதற்கு ஐயாவின் இந்த வரிகளே காரணம். பகவான் ரமணர், ‘‘உன்னை நீ சரீரமாக அபிமானிக்கிறாய் அல்லவா? அதுபோல ஈஸ்வரன் இந்த மலையை நான் என அபிமானிக்கிறார்’’ என்று சொன்னபோது நான் ஐயாவின் நேரடியான யோகியால் ஏற்படுத்தப்பட்ட அனுபவத்தை நினைத்து, கண்களில் நீர் வழிய மலையைப் பார்த்திருக்கிறேன்.

கோயில்களைக் குறித்த ஞானமும், கோயிற் கட்டுரைகளை எப்படி எழுதவேண்டுமென்று சொல்லிக்கொடுத்தவரே ஐயாதான். புராணங்களைத் தத்துவச் செறிவோடு பார்க்கச் செய்தவர். சில முக்கிய கோயில்களின் அதிர்வுகள் குறித்து வெளிப்படையாக எழுதி வாசகர்களை போகச் செய்தவர். மேலும், ஐயாவின் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், புத்தி எதுவரை ஆன்மிக நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கிறதோ அதுவரையிலும் சென்று, தேவையெனில் காரணமேயில்லாமல் ஆன்மிக நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விடும் சூட்சுமத்தைப் பார்க்கலாம். கோயிலைக் குறித்த விஷயங்களை ஐயா ஒருமாதிரி புடைத்து எடுத்து வைத்துக்கொள்வார். இது கலைப் பெட்டகம். இது சூட்சுமமான கோயில். அங்கபோனா மனசு காணாமப் போகும் என்று பல்வேறு புத்தகங்களில் சொல்லிச் சென்றிருக்கிறார். மேற்கூரையே இல்லாத முண்டகக் கண்ணி ஆலயத்திற்குள் செல்லும்போது கோபுரத்திற்குள் நுழைவதுபோல் போவார்.


இன்னும் இன்னும் சொல்வத|ற்கு நிறைய இருக்கின்றன. இந்தப் புத்தகம் பேரனுபவத்தைத் தரும், வாழ்வின் கோணங்களைத் துல்லியமாகக் காட்டும். இண்டு இடுக்கு விடாமல் சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்களைக் குறித்தும் விரிவாக இதில் பகர்ந்திருக்கிறார். ஒரு கேள்வி, அதற்கான பதில் என்றல்லாமல் ஒரு அனுபவத்தைக் கடத்துகின்ற சத்தியம் ஐயாவின் எழுத்தில் இங்கும் வெளிப்பட்டிருக்கின்றது.

இந்தப் புத்தகத்தை எவராலும் முடிக்கமுடியாது. ஏனெனில், கருத்துகளைத் தொகுத்துக்கொண்டு பதிலாக்கி முடிவைத் தராது. இந்தப் புத்தகம் மூளையால் கிரகிக்கப்படாது, இதயத்தால் உணரப்படவேண்டும். அம்மாதிரி விஷயங்களே இதில் அனந்தம். எனக்கு எவரேனும் ஆர்வமாகக் கேள்வி கேட்டாலே உத்தவசுவாமியின் நினைவு வரும். அந்த ஸ்தான பீடத்தில் அமர்ந்து திரு. சுவாமிநாதன் அவர்கள் பெரும் பாக்கியவான் என்பதையே காட்டுகிறது. குருவருள் அவரை ஐயாவிடம் நகர்த்தியிருக்கிறது. அடுத்த தலைமுறை இம்மாதிரியான புத்தகங்களைப் பொக்கிஷமாகக் கொள்ளும்.

நானூறு வருடங்கள் கழித்து திருவண்ணாமலையில் யோகிராம்சுரத்குமார் என்றொரு மகான் வாழ்ந்தாராமே எனும்போதே ஐயாவின் வாழ்க்கையும், அவர்தம் புத்தகங்களுமே ஆதாரமாக நிற்கும். ஐயா அடிக்கடி ஒன்று சொல்வார். ‘‘எழுதுங்க.... பேச்சு காத்தோட போகும். எழுத்து அப்படியில்லை’’.

ஆன்மிகத்தில் தீவிரமாகச் செல்வோருக்கும், கரையிற் நிற்பவர்களுக்கும் சேர்த்துச் கூறியிருக்கும் ஐயாவின் பதில்கள் ஒவ்வொன்றுமே தெளிவைக் கூர்பிடிக்கும் சாணக் கல்லாகும். பலது நம்மைச் சீண்டக்கூடியது. அதையும் தாண்டி அமைதியைக் கொடுப்பது. எல்லாவற்றிற்கும் மேல் எதை அவர் குருவின் சந்நதியிலும் நிழலிலும் அமர்ந்து பெற்றாரோ அது உங்களுக்குள்ளும் செயல்படும். இதுவரை பாரத தேசத்தில் குரு சீடன் வழியாகத்தான் அனைத்தும் கொடுக்கப்பட்டிருக்கிறது.


என்றும் அன்புடன்,
கிருஷ்ணா

 மார்ச் 29, 2017


Comments

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்