ஸ்ரீ எம் - ன் 'காசும், பிறப்பும்'



ஸ்ரீ எம் - ன் 'காசும், பிறப்பும்'

சரஸ்வதி சுவாமிநாதன் 

அய்யன் பாலகுமாரன் எழுதிய ஒரு நாவலின் தலைப்பு 'காசும் , பிறப்பும் '  இந்த நாவல் ஒரு ஆன்மாவின் பல பிறவிகளைப்பற்றி பேசும் நாவல். ஒரு சீடனின் ஆசைகளை ஒரு குரு உடனிருந்து வழிநடத்த அவன் பல பிறவி அனுபவங்களையும், தற்போதைய வாழ்வையும், எதிர்கால முடிவையும் சீடனுக்கு குரு உணர்த்தும் நாவல். இந்த நாவலில் அய்யன் பாலகுமாரனே சீடன். குருவாக இருப்பவர் திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் என்பதை வாசிப்போர் உணர முடியும்.

இந்த தலைப்பு, ஆண்டாள் திருப்பாவையில் கையாண்ட வரிகள். அந்த வரி....

' காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து....' மூச்சின் செயல்பாடே வாழ்க்கை என்று விளக்கும் இந்த நாவல் படித்து வளர்ந்த எனக்கு 'ஸ்ரீ எம்' அவர்களின் இவ்விரு நூல்களான 'இமயகுருவின் இதய சீடன்' மற்றும் 'பயணம் தொடர்கிறது' என்ற இரண்டு நூல்களும் சமீபத்தில் வாசிக்க கிடைத்தது.

இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்காக அவதரித்த ஷீரடி சாய்பாபாவை இன்று பல இந்து அமைப்புகள் எதிர்ப்பதும், அவரை முஸ்லீம் என அடையாளப்படுத்துவதையும் இன்றும் காண்கிறோம். ஆனால் திருவனந்தபுரத்தில் மும்தாஜ் அலிகான் என்ற பெயரில் பிறந்து பல ஆன்மீக அனுபவங்களைப் பெற்ற ஸ்ரீ எம் அவர்களின் இவ்விரு நூல்கள் குறித்த எனது குறிப்புகளை காசும், பிறப்பும் என்ற தலைப்பில் எழுத தூண்டியது. இன்றைய அரசியலில் நிகழ்ந்துவரும் மதமோதல்களின் அடிப்படை என்ன என்பதை தேட சகிப்புத்தன்மை என்பது இன்றைய தலைமுறைக்கு மிகவும் அத்தியாவசியம் என்ற புரிதலை இந்த இரு நூல்களும் தந்தன.

Listening , Analysing, Decision making இவைகள் இன்றைய நிலையில் அவசியமான ஒன்றாகும்.

மேலும் ஸ்ரீ எம் குறித்து அறிய விரும்புபவர்கள்

https://satsang-foundation.org/contact-us/

என்ற மேற்சொன்ன இணைப்பின் மூலம் அறியலாம் இனி நூலில் என்னைக்கவர்ந்தவைகளோடு பயணிப்போம்.

இமயகுருவின் இதய சீடன் நூலில்....


ஸ்ரீ எம் அவர்களின் குரு மகேஷ்வரநாத் பாபாஜி கூறிய ஒரு அறிவுரை....

'வாழ்க்கையில் எப்படி சந்தோஷமாக இருக்கலாம் என்று நண்பர்களுக்கும் உன்னைச் சாரந்தவர்களுக்கும் உதாரணமாக இரு. அதே சமயம், எல்லையற்ற விழிப்புணர்வின் அபரிதமான ஆற்றல்களுடனும், கீர்த்திகளுடனும் உன்னை இணக்கம் செய்து கொள்'

' எனதருமை சீடர் கபீர் சொன்னது போல நீ வாளைவிட்டு, வாளின் உறைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறாயா ? பல வருடங்கள் கடுமையாக உழைத்ததின் பலன்களை எல்லாம் மின்னல் வேகத்தில் அழித்து விட்டாய். ஒரு நிமிடம் கருணையோடு இருப்பது நூறு ஆண்டுகள் தீவிரமாகத் தவம் செய்வதற்கு ஒப்பானதாகும்.' 

இந்த வரிகள் தீண்டாமையை எதிர்த்து ஆன்மாவைக் கொண்டாடும் அற்புதமான வரிகள்.

திருவனந்தபுரத்தில் 9 வயதில் ஸ்ரீ எம் அவரது வீட்டின் தோட்டத்தில் உள்ள பலாமரத்தின் கீழ் ஒரு குருவை சூட்சமமாக சந்திக்கிறார்...அப்போது அவருக்குள் விதைக்கப்படும் தேடல் அவரை இமயமலை வரை கொண்டு செல்கிறது. அவரது குருவின் மூலம் ஸ்ரீ குரு பாபாஜி எனப்படும் மகாஅவதார் பாபாஜியின் அறிமுகம் வரை நடைபெறுகிறது.

திரு.ரஜினிகாந்த் நடித்த 'பாபா' என்ற படமும், பரஹம்ஸ யோகானந்தர் எழுதிய 'யோகியின் சுயசரிதை' நூலும் குறிப்பிடும் மகா அவதார் பாபாஜியே இந்த நூலில் வரும் 'ஸ்ரீ குரு பாபாஜி' ஆவார்.

ஸ்ரீ எம் எழுதிய தனது சுயசரிதையில் சூஃபிகளைப் பற்றி குறிப்பிடுகையில், 'பைத்தியக்காரத்தனத்திற்கும், ஆன்மீகப் பரவசத்திற்கும் மிக சிறிய இடைவெளிதான் உண்டு என்பது அப்போது எனக்குத் தெரிந்து இருக்கவில்லை'  என்று தனது
தவறை பதிவு செய்கிறார் ஸ்ரீ எம்.

உணவுப்பற்றி குறிப்பிடுகையில் ஸ்ரீ எம், ' சரியான உணவுச்சத்து அவசியம்தான். ஆனால் சைவ உணவுகளே அதைத் தந்துவிடும் என்று நம்புகிறேன். நீங்கள் விருப்பப்பட்டால் அசைவத்தை உண்ணலாம். மனித உடல் அசைவம் இல்லாமல் வாழ முடியாது என்று சொல்வதெல்லாம் அபத்தம்'


ஸ்ரீ எம் தனக்கு அனாஹதா சக்ரா வெளிப்புற சக்தியின்றி தானாகவே தூண்டப்பட்டிருந்ததாக குறிப்பிடுகிறார். இத்தகைய குறிப்புகள் அவரது முற்பிறவி குறித்த அனுபவங்களைப்பற்றி ஸ்ரீ எம் விளக்கும்போது நம் மனதில் நிழலாடுகிறது.

காயத்ரி மந்திரம், நாராயணகுரு பற்றிய விளக்கம், மஸ்தான் சாகிப், மாயம்மா போன்றோரின் ஆசிகள் ஸ்ரீ எம் அவர்களுக்கு கிடைத்த அனுபவங்கள் சிலிர்ப்பூட்டுபவை. தனக்கு கிடைத்த ஒரு ஆசியை ஸ்ரீ எம், ' வாக்குவாதங்களும், விவாதங்களும் அளவில்லாததிடம் நெருங்க முடிவதில்லை. அன்பு ஒன்றுதான் அதை செய்ய முடிகிறது. இதயத்தைத் திறந்து கிருஷ்ணனைப் பார். கோபியர்கள் அன்பு காட்டியதுபோல் நீயும் காட்டு...' 

செம்பழந்தி ஸ்வாமிகள் ஸ்ரீ எம் இடம் , ' ரா ஆஆ மாயணம்....ரா...என்றால் இருட்டு...அந்த இருட்டு போகவேண்டும்....அப்போது ராமனை நீ பார்க்கலாம். அறியாமை எனும் இருள் போனால்தான் 'ராமன்' என்கிற வெளிச்சத்தைப் பார்க்க முடியும் ! '

கன்யாக்குமரி அம்மன் குறித்த வரலாறு தற்சமயம் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் செயற்கை மூக்குத்தி, விவேகானந்தர் பாறை மாயம்மாவின் சந்திப்பும் அவரது தாக்கம் என சிறப்பான ஆன்மீக தயார் நிலைகளை ஸ்ரீ எம் பெற்றிருக்கிறார்.

' புனிதமானவன் என்று சொல்லிக் கொள்பவன், அற்புத சக்திகளைக் காட்சிப்படுத்தினால், அங்கிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ, அவ்வளவு தூரம் விரைவாக விலகிச் சென்று விடுங்கள்' என்ற ராமகிருஷ்ண பரமஹமசரின் போதனைகள் ஸ்ரீ எம் க்கு கைக்காட்டியாக இருந்திருக்கிறது.

மும்தாஜ் அலிகான் என்ற பெயர் சில ஆன்மீகப்பயணங்களுக்கு தடையாக இருக்கும் என்பதால் 'சிவ பிரசாத்' என்று பெயர் மாற்றப்பட்டு நகரும் இமயமலை நோக்கிய பயணம் நீண்ட , நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒரு அனுபவம் ஆகும். Travel Guide போன்று பல பயணவழிகளை ஸ்ரீ எம் விளக்கியிருக்கிறார்.

'காலி கம்பளிவாலா சத்திரம்' குறித்த வரலாறு ஒரு முக்கிய ஆவணமாகும். ' மத சார்போடு இருப்பதற்காக முட்டாள்தனமாக இருப்பது அவசியமில்லை' 

என்ற வரிகளில் பல தெளிவுகள் நமக்கு பிறக்கின்றன. வசிஷ்டர் குகை பயணம், நாகாக்களிடம் மஹா மந்திரங்களைக்கற்றல். பத்ரிநாத் பயணம். பத்ரிநாத் ல் ஆதிசங்கரர் நிறுவிய நாராயணர் சிலை, அங்கிருந்து நீக்கபட்ட பத்மாசனத்தில் அமர்ந்த புத்தர்சிலை பற்றிய சரித்திர சான்றுகள் இல்லை என்றும் பதிவு செய்கிறார்.

ஸ்ரீ எம் இடம் ஒருமுறை பாபாஜி சமையல் குறித்து பேசுகையில், " காய்கறிகளைக் கூட சரியாக வெட்டத் தெரியாமலோ, அரிசியினை முழுமையாக சமைக்கத் தெரியாமலோ இருந்தால் , இந்த உலகத்தில் நீ எப்படி அதி உன்னதமான பூரணத்தை கண்டுபிடிப்பாய் ? இது எப்படி இருக்கிறதென்றால், ஒருவன் நாள் முழுவதும் பொய்கள் சொல்லிவிட்டு , முழுமையான சத்தியத்தைத் தேடுகிறேன் என்று சொல்வது போல இருக்கிறது...." 

அத்தியாயம் 22 குண்டலினி தூண்டப்பெறுதல் குறித்து விவரமாக விளக்குகிறது. பலமுறை வாசிக்கவைக்கும் தத்துவ செறிவும், அடர்வும் உள்ள பக்கங்கள் இவை.

திபெத்திய லாமாக்களுடனான சந்திப்பு, அவர்களின் வரலாறு, வழிக்காட்டல் , ' ஓம் மணி பத்மே ஹௌம்' என்ற புத்த மந்திர உபதேசம் என ஸ்ரீ எம்மின் சுயசரிதை பல உச்சங்களை தொடுகிறது. Etti Iceman பற்றிய விவரணைகள் பகுத்தறிவை ஒதுக்கி வாசிக்க வேண்டிய அனுபவங்கள்.

வேதவியாசர் பற்றிய குறிப்புகளில் பாபாஜி, " ஒருவரின் யோக்கியதைகள் தான் முக்கியமே ஒழிய அவரின் பிறப்போ, ஜாதியோ முக்கியம் அல்ல...." " எந்த ஆதிக்கமும் இல்லாமல் இருக்கும் சுதந்திரமே, வேதங்களைக் கற்றுக் கொள்வதின் ஆத்மா என்று சொல்லலாம்....." 


மண்டுக்ய உபநிஷத் புத்தரின் போதனைகளோடு ஒன்றி போவது குறித்த சில எடுத்துக்காட்டுகள் விளக்கப்படுகின்றன.

உபநிஷத், உடல், ஆன்மா , மனம் என பல விஷயங்கள் குறித்து ஸ்ரீ எம் பாபாஜியிடம் பெற்ற தெளிவுகள் நமக்கும் பரிமாறப்படுகின்றன.

" உன்னுள் இருக்கும் ஆசையை, அதன் இன்பத்தை அனுபவிக்காமல் , அகற்ற முடியாது" 

என்று பாபாஜி கூறியதோடு ஸ்ரீ எம்மிற்கு மசாலா தோசை சாப்பிட பணமும் தருகிறார். " உனது அனுபவத்தை யாரும் நம்பமாட்டார்கள். ஆனாலும், உனது சுய சரித்திரத்தை எழுதும் பொழுது, இதைப்பற்றி மக்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். யார் நம்புகிறார்கள், யார் நம்பவில்லை என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உண்மை, பல நேரத்தில் கற்பனையை விட வினோதமாக இருக்கும்..."

இந்த பாபாஜியின் மொழிகளை இந்த நூல் முழுவதும் ஸ்ரீ எம் எந்த விமர்சனம் குறித்தும் கவலைப்படாமல் பதிவு செய்திருக்கிறார்.

" அருமைக் குழந்தாய் ! நாம் எல்லோருமே இறக்கத்தான் போகிறோம். நீ, நான், இவர் ! எல்லோருமே இறக்கத்தான் போகிறோம். இறப்பு, என்பது தவிர்க்க முடியாதது. அது நமக்கு என்றைக்குமே தோழன், அதனை கலங்காத மனதுடன் ஏற்றுக்கொள். இறப்புடன் சமாதானம் செய்து கொள். அதுவும் உனது நண்பனாக மாறி விடும்"

என்றும் பாபாஜி ஸ்ரீ எம் இடம் கூறியிருக்கிறார்.

நிரந்தர உண்மை குறித்த ஸ்ரீ எம் கேள்விக்கான பாபாஜியின் பதில், " நாம் சுமந்துக் கொண்டிருக்கும் அறிவுப் பெட்டகமான மூளையில் , குப்பைகள் எதுவும் இன்றி , காலியாக இருக்கும் தருணத்தில்தான், அமைதியாகவும், அசைவு இல்லாமலும், வேறு எதுவாகவும் ஆக முயற்சிக்காமலும், எதையாவது பெறப் போராடாமல் இருக்கும் தருணத்தில்தான் , அந்த வெற்றிடத்தில் நிரந்தரமாக இருக்கின்ற அந்த உண்மை என்கிற தெய்வம் தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொள்கின்றது"

ஸ்ரீ வித்யை குறித்த தகவல்கள், Sir John Woodroffe எழுதிய The Serpent power என்ற நூல் குறித்த விவரணை, சக்கரம், யந்திரம் என ஓரளவு சாறு பிழிந்து தர ஸ்ரீ எம் முயன்றிருக்கிறார்.

யோகி என்பவன் குறித்த ஸ்ரீ எம்மின் அடையாளம். மழை அவனை  நனைக்கும், சூரியன் அவனைக் காயும், உணவிற்காகப் பிச்சை கேட்பான். எங்கே இடம் கிடைக்கிறதோ அங்கே தூங்குவான் என்கிறார்.

ஜே. கிருஷ்ணமூர்த்தியுடனான சந்திப்பு, அவரது உரை, இறுதிக்காலங்கள் என பல முக்கிய தகவல்களை ஸ்ரீ எம் இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

கல்கத்தா, பேலூர், ராமகிருஷ்ணமடம் பயணங்கள் , அனுபவங்கள் நம்மை பயணிக்கத்தூண்டுபவை. நீம் கரோலி பாபா உடனான அனுபவம் அருமை.  காசியின் அகோரி அறிமுகங்கள் ஆன்மீகத்தின் பேரில் நடக்கும் ஏமாற்றுக்கள் , போதைகள் குறித்தும் நம்மை எச்சரிக்கின்றன. ஆலண்டி, ஷீரடி அனுபவங்கள் முற்றிலும் நமது அறிவுக்கு அப்பாற்ப்பட்ட உன்னத அனுபவங்களாகவே நாம் உணர இயலும்.

திருவண்ணாமலை பயணம், அனுபவங்கள், மும்பை தாஜ் ஓட்டலில் மகேஷ்வரநாத் பாபாஜியின் புதிய உடை, ஸ்ரீ எம் உடனான சந்திப்பு போன்றவை குரு என்பவரின் உயர்வை பறைசாற்றுபவை.

பாபாஜி உடல் நீங்கும் தருணம், ஸ்ரீ எம் திருமணம், சத்சங்கம் நிறுவனத் துவக்கம். பாபாஜியின் தொடர்ந்த வழிக்காட்டல். ஸ்ரீ எம் ன் பணிகள் என முடிகிறது 'இமயகுருவின்் இதய சீடன்' என்ற நூல். ( 2012 )

இதன் தொடர்ச்சியாக வெளிவந்த நூல் ' பயணம் தொடர்கிறது' ( 2020 ) என்ற நூல் ஆகும்.

'பயணம் தொடர்கிறது' என்ற நூலில் இருந்து.....

முதல் தொகுப்பில் எழுத நினைத்து பாபாஜியின் அனுமதி கிடைக்காதவைகளை இத்தொகுப்பில் ஸ்ரீ எம் எழுதியுள்ளார்.

கணேஷ்புரி நித்யானந்தருடன் நடந்த ஸ்ரீ எம் உடைய சந்திப்பில் அவருக்கு விழுந்த அறையானது ஸ்ரீ எம் - ன் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவியானது எவ்விதம் என விளக்கியிருக்கிறார்.

குருவாயூரப்பன் தரிசனம் , ஸ்தலபுராணம் என பலவற்றை விளக்கும் அத்தியாயம் ஸ்ரீ எம் பெற்ற ஆசிகளை விரிவாக பகிர்கிறது.

காஞ்சன்காட்டின் சுவாமி சச்சிதானந்தர் உடனான நட்பு குறித்து சிலாகிக்கிறது ஒரு அத்தியாயம்.

உடல் கடந்து வெளியிடையில் நகரும் பயணத்திற்கான சில அடிப்படை பயிற்சிகளை விளக்குகிறார்.

" காற்று மலர்களின் மணத்தை சுமந்து செல்வது போல ஆசைகளையும், வாசனைகளையும் ஒரு விதை ரூபத்தில் சுமந்து சென்று , அதை அனுபவித்துப் பூர்த்தி செய்ய, ஒரு புதிய உடல் கிடைத்தவுடன் அதை ஆக்கிரமித்துக் கொள்கிறது "

இந்த கீதையின் வரிகளை விளக்கும் போதே ஸ்ரீ எம் அவர்களின் அனுபவங்களும், வாழ்க்கையும் நமக்கும் பரிமாறப்படுகின்றன.

தந்த்ரா இது குறித்து நமக்கிருக்கும் பல தவறான புரிதல்களை தெளிவாக்குகிறார் ஸ்ரீ எம். " உண்மையை உணர ஒரு வழியின் பெயர்தான் தந்த்ரா. இது இலக்கை அடைய யந்திரங்களை உபயோகப்படுத்துகிறது. யந்திரம் என்பது இலக்கை அடைய உதவும் தொழில் நுட்பத்தின் வரைபடங்கள் மற்றும் செயல் திட்டங்களாகும் " 

குண்டலினியை எழுப்ப ஸ்ரீ வித்யா மந்திரங்களான பஞ்சதஷாக்ஷரி , ஷோடஷாக்ஷரி என்பவைகளின் உபயோகம். சக்கரங்களின் தன்மை, பீஜ மந்திரம் என பலவற்றை அறிமுகம் செய்கிறார்.

தத்தாத்ரேயர், புத்தர் , சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோர் குறித்த அறிமுகம் அவர்களுடைய அவதார மற்றும் பயண இடங்களில் ஸ்ரீ எம் பெற்ற அனுபவங்கள் என நகரும் இந்த நூலின் சிறப்பம்சம் பாபாஜி உடனான மூன்று உரையாடல்கள் ஆகும். ( பாபாஜி என்பது மகேஷ்வரநாத் பாபாஜி )

ஈஷா உபநிஷத்தின் வரிகளான, " அறியாமையை ஆராதனை செய்பவர்கள் அடர்ந்த இருளை அடைகிறார்கள். அறிவை ஆராதனை செய்பவர்கள் அதைவிட அடர்ந்த இருளில் நுழைகிறார்கள்"

இதற்கு பாபாஜி அறியாமை என்ற முள்ளை நீக்க அறிவு என்ற முள் தேவைப்படுகிறது. விடுதலையை இலக்காக கொண்ட யோகி இரண்டையும் தூக்கி எறிந்து விடுவான் என்கிறார்.

Theory of relativity யை ஆன்மீகத்தோடு பார்க்க கற்றுத்தருகிறது பாபாஜி - ஸ்ரீ எம் உரையாடல்.

அவதூதகீதை, நாராயணீயம் என்ற பல நூல்களை பாபாஜி ஸ்ரீ எம் இடம் சிலாகிக்கிறார். பதஞ்சலி யோக சூத்திரம் குறித்து விளக்கும் பாபாஜி அதனை குருமுகமாக பயிற்சி செய்யுமாறும் கூறுகிறார்.

சன்னியாசம் பெற முயன்ற ஸ்ரீ எம் ஐ அதனை பெற இயலாது தடுத்தாட கொண்ட பாபாஜி என பல அற்புதமான நிகழ்வுகள் மீண்டும் நூலை வாசிக்கத்தூண்டுபவை.

" வன்முறையையும், கொடூரத்தையும் கொண்ட ஆத்திகனை விட அமைதியான கருணையான நாத்திகன் மேலானவன் " 

என்ற பாபாஜியின் வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவை.

மானுடர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த " The walk of Hope " என 7500 கி.மீ நடை பயணத்தை 500 நாட்களில் 2015 - 16 வருடங்களில் நடத்திய ஸ்ரீ எம் பிரதமர், ஜனாதிபதி, முதல்வர் , பல துறை நிபுணர்கள் மற்றும் பிரபலங்களை சந்தித்து இருக்கிறார்.


ரஜினிகாந்த் உடன் ஸ்ரீ எம் 



இந்த நடைப்பயணம் ஜனவரி - 12 , 2015 ல் கன்னியாக்குமரியில் துவங்கப்பட்டது அன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் ஆகும். 'மானவ் ஏக்தா' ( மனித ஒருங்கிணைப்பு ) நம்மிடையே இருந்தால் எதற்கு இந்த நடைபயணம், என்று பலர் வினவினர்....

" நம்முள் ஒற்றுமை இருக்கிறது. ஆனால் சில சமயம் அது பிறழ்கிறது. அந்தப் பிறழ்வு அதிகமானால் அது கையை மீறிச் சென்றுவிடும் "  



                                                   ஸ்ரீ எம் 

என்கிறார் ஸ்ரீ எம் மானுடனாக இங்கு பிறந்து , மானுடர்களோடு இங்கு வாழ்வதே மானுடர்களை உயர்த்தவே. மானுடத்தை உயர்த்த எத்தனை பிறவி வேண்டுமானும் எடுப்பேன் என்றார் போதிசத்வர். காசு, பிறப்பு என்பது மூச்சின் மேல் இருக்கும் கவனம். ஸ்ரீ எம் சுயசரிதையாக வெளிவந்த இந்த இரு நூலும் , மானுடத்தை , சக உயிர்களை நேசிப்பவர்களை நிச்சயம் மேலும் உயர்த்தும்.

ஆன்மீகம் என்பது பிரபஞ்சம் தழுவிய காதல் அவ்வளவே.

என்றென்றும் அன்புடன்...
சரஸ்வதி சுவாமிநாதன்.
02/03/2020

குறிப்பு :

தங்கள் கருத்துக்களை தயை கூர்ந்து கமெண்ட் பகுதியில் இடவும்.






Comments

  1. எழுதஎழுத்துச் சித்தரின் பாதிப்பு தலைப்பு முதல் வாக்கிய அமைப்புகள் வரை வெகு அழகாக பயின்று வந்துள்ளது.. உங்களது புரிதலை அழகான உதாரணங்களுடன் ஆழமாக விளக்கியுள்ளீர்கள். அற்புதமான நூல்கள் குறித்து அற்புதமான கட்டுரை.. ஞானியரின் ஆசிகள் போலும்

    ReplyDelete
  2. அன்பிற்கு நன்றி பிச்சைக்காரன்.

    ReplyDelete
  3. நமஸ்காரம் தேடலை தூண்டுவிக்கும் பதிவு. அது மட்டுமல்லமால் இமயத்தில் இருப்பது என்பது என் குருவின் மடியில் இருப்பதை போன்ற உணர்வைத் தருகிறது. எனது அந்திமக் காலத்தை கழிக்க இமயத்தின் ஒரு பகுதியை தெரிவு செய்துள்ளேன். என் குருவின் விருப்பத்தை பொறுத்தது அது. இமயத்தைப் பற்றி யார் பேசினாலும் எழுதினாலும் நான் கரைந்துவிடுகிறேன்.நன்றி நண்பரே.

    -மஞ்சுநாத்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருப்பம் தந்த திருப்பட்டூர்

எழுத்துக்கு எழுபது - சரஸ்வதி சுவாமிநாதன்

சத்தியம் என்ற சொல் - எழுத்துச்சித்தர் பாலகுமாரன்